பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 July 2021 12:00 AM IST (Updated: 12 July 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பலத்த காற்றால் மின்கம்பங்கள், மரங்களும் சாய்ந்தன.

நாகர்கோவில்:
குமரியில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பலத்த காற்றால் மின்கம்பங்கள், மரங்களும் சாய்ந்தன.
மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக குமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதை தொடர்ந்து குமரியில் 2 நாட்கள் பலத்த மழை பெய்தது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றார்-2 அணை பகுதியில் 27 மில்லி மீட்டர் பதிவானது. இதே போல மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-15.6, பெருஞ்சாணி-8.2, சிற்றார் 1-15.6, மாம்பழத்துறையாறு-7, பூதப்பாண்டி-3.2, களியல்-2, கன்னிமார்-4.2, கொட்டாரம்-4.6, குழித்துறை-3, மயிலாடி-5.2, நாகர்கோவில்-9.4, புத்தன்அணை-15.6, சுருளோடு-8.6, தக்கலை-2, குளச்சல்-8, இரணியல்-3.2, பாலமோர்-15.2, கோழிப்போர்விளை-8, அடையாமடை-7, குருந்தன்கோடு-4.2, முள்ளங்கினாவிளை-4, முக்கடல்-5.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
அணைகளுக்கு நீர்வரத்து
மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதாவது பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் காலை 1,466 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று காலை 2,242 கனஅடியாக அதிகரித்தது. இதே போல 944 கனஅடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 1453 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 7 கனஅடி தண்ணீரும் வந்தது.
குமரி மாவட்டத்தில் அனைத்து அணைகளிலும் ஏற்கனவே போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில் மழை பெய்ததால் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை 506 கனஅடி தண்ணீர் பாசன கால்வாய் வழியாக திறந்துவிடப்பட்டது. மேலும், அணையில் இருந்து 1082 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. சிற்றார்-1 அணையில் இருந்து 268 கனஅடி தண்ணீர் உபரியாக திறக்கப்பட்டு உள்ளது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதே போல பழையாற்று கால்வாய், தோவாளை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பழையாற்று கால்வாயில் நாகர்கோவிலில் உள்ள குமரி தடுப்பணையில் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது. 
குமரி மாவட்டத்தில் மழையோடு சேர்த்து சூறைக்காற்றும் வீசுவதால் பல்வேறு இடங்களில் மரம் விழும் சம்பவங்களும், வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்த சம்பவங்களும் நடைபெற்றன. அந்த வகையில் நேற்று நாகர்கோவில் கோணத்தில் பழமை வாய்ந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. அதுவரையிலும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதைப்போல விளவங்கோடு தாலுகாவிலும் ஒரு மரமும், கிள்ளியூர் தாலுகாவில் 2 மரங்களும் விழுந்தன.
வீடுகள் சேதம்
அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 4 இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. இதே போல கல்குளம் தாலுகாவில் 3 மின் கம்பங்களும், விளவங்கோடு தாலுகாவில் 2 மின் கம்பங்களும், கிள்ளியூர் தாலுகாவில் 4 மின் கம்பங்களும் சேதமடைந்து உள்ளன. அதோடு மழைக்கு கல்குளம் தாலுகாவில் ஒரு வீடும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடும் சேதமானது.

Next Story