கரூரில், இன்றைய தலைவரே, நாளைய முதல்வரே என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
கரூரில், இன்றைய தலைவரே, நாளைய முதல்வரே என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர்
போஸ்டர்கள்
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகன் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் இணை மந்திரியாக பதவியேற்றார். இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவராக கரூர் மாவட்டம், தொட்டம்பட்டியை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் தமிழகத்தின் இன்றைய தலைவரே... நாளைய முதல்வரே... என வாழ்த்தி பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அண்ணாமலை ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளது.
பரபரப்பு
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை ஒன்றிய அரசு என தொடர்ந்து கூறி வருகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாத மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்தில் உள்ள மேற்கு மாவட்டத்தை கொங்கு நாடு என அறிவித்து புதுச்சேரி போன்று யூனியன் பிரதேசமாக மாற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் பரவி வருகிறது.
இந்தநிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அண்ணாமலையை வாழ்த்தி இன்றைய தலைவரே நாளைய முதல்வரே என பா.ஜ.க.வினர் போஸ்டர்கள் ஒட்டி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தள்ளு-முள்ளு
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டதை வரவேற்று கரூரில் பா.ஜ.க.வினர் அனுமதி பெறாமல் சாலையில் திரண்டு பட்டாசு வெடித்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் பிரபுசங்கர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்மொழி உத்தரவிட்டார். இதில் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story