பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்


பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 July 2021 12:19 AM IST (Updated: 12 July 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
ஆய்வு கூட்டம்
குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது:-
கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக விதவைகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானவர்களுக்கு உதவித்தொகை விரைந்து கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும். சரியாக திட்டமிட்டு, தொய்வு ஏற்படாமல் தரமானதாகவும் உறுதித்தன்மையோடும் இருக்க வேண்டும். பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை விரயம் செய்யாமல் திட்டமிட்டு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இதில் தவறுகள் ஏதும் ஏற்பட்டால் தொடர்புடைய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களை இனம் கண்டு, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாதாள சாக்கடை பணிகள்
நாகா்கோவில் மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி, கூட்டு குடிநீர் திட்ட பணி ஆகிய பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். முடிவுறாமல் உள்ள சாலைப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளும் சீராக இருக்க வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரியத்தினர் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை சரிசெய்து தேவையான இடங்களில் போர்வெல் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய்கள் அமைக்க தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்த ஏற்றவாறு சீர்படுத்தி சாலை விபத்தினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும். பணிகளில் மெத்தன போக்காக இருக்க கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏ.வி.எம். கால்வாய்
மார்த்தாண்டம் நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுகள் தரம் பிரித்து உரம் உற்பத்தி செய்யும் மையத்தை உடனடியாக அப்புறப்படுத்தி ஒதுக்குபுறமான ஞாறான்விளை பகுதியில் அமைக்கவும், மார்த்தாண்டம் சந்தை பகுதியில் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் நவீன கட்டண கழிப்பறை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளச்சல் நகராட்சியில் உள்ள ஏ.வி.எம். கால்வாய் அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது ஏ.வி.எம். கால்வாயில் கலப்பதால் அந்த கால்வாய் மாசடைகிறது. எனவே நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர்கள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்ணாண்டோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story