நெல்லை கடற்படை தளத்துக்கு வெற்றிச்சுடர் வந்தது


நெல்லை கடற்படை தளத்துக்கு வெற்றிச்சுடர் வந்தது
x
தினத்தந்தி 12 July 2021 12:28 AM IST (Updated: 12 July 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

1971-ம் ஆண்டு போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, நெல்லை கடற்படை தளத்துக்கு வெற்றிச்சுடர் கொண்டு வரப்பட்டது.

நெல்லை:
1971-ம் ஆண்டு போர் வெற்றி தினத்தை  முன்னிட்டு, நெல்லை கடற்படை தளத்துக்கு வெற்றிச்சுடர் கொண்டு வரப்பட்டது.

போர் வெற்றி சுடர்

கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை நினைவுகூறும் வகையில் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

இதையடுத்து புதுடெல்லி தேசிய போர் நினைவு சின்னத்தில் உள்ள தீச்சுடரில் இருந்து 4 வெற்றிச்சுடர்கள் எடுக்கப்பட்டு, போரில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர் வசிக்கும் நகரங்கள் வழியாக நாட்டின் 4 திசைகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

நெல்லை வந்தது

அதன்படி தெற்கு திசை நோக்கி புறப்பட்ட வெற்றிச்சுடரானது நேற்று நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளத்தை வந்தடைந்தது. அங்கு தளபதி கேப்டன் ஆசிஷ் கே.சர்மா மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் சம்பிரதாய முறைப்படி, போர் வெற்றி சுடரை பெற்று கொண்டனர்.

தொடர்ந்து போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அங்கு வருகை தந்த முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். 

கன்னியாகுமரிக்கு பயணம்

இதுகுறித்து பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘போர் வெற்றிச்சுடர் இந்தியாவின் தெற்கு முனையான கன்னியாகுமரிக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதுதவிர போரில் ஈடுபட்ட சிப்பாய் காசிமணி மற்றும் நாயக் சங்கிலி செல்லையா ஆகியோரின் வீடுகளுக்கு வெற்றிச்சுடர் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது போரில் பங்குபெற்றோரின் குடும்பத்தினரும் கவுரவிக்கப்படுகிறார்கள்.

நாளை (செவ்வாய்க்கிழமை) வெற்றிச்சுடர் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் வழியாக செல்கிறது. தூத்துக்குடியில் என்.சி.சி மாணவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் கடலோர காவல்படையினரிடம் வெற்றி சுடர் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பிறகு, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் வெற்றிச்சுடர்  ஒப்படைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story