திருச்சியில், 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து சாவிலும் இணைபிரியாத தம்பதி


திருச்சியில், 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து சாவிலும் இணைபிரியாத தம்பதி
x
தினத்தந்தி 12 July 2021 12:50 AM IST (Updated: 12 July 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார். 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து சாவிலும் இணைபிரியாத தம்பதியாக மாறினர்.


திருச்சி,

திருச்சியில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார். 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து சாவிலும் இணைபிரியாத தம்பதியாக மாறினர்.

பொன்விழா கண்ட தம்பதி

திருச்சி பாலக்கரை கீழப்புதூர்ரோடு கீழகிருஷ்ணன் கோவில்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 73). இவருடைய மனைவி நாகம்மாள் (68). இருவருக்கும் திருமணமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. 
பொன்விழா கண்ட இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 3 மகள்கள். இவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் அதேபகுதியில் அருகருகே வசித்து வருகிறார்கள்.

கணவா் சாவு

மகாலிங்கத்துக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நாகம்மாள் கணவருக்கு பணிவிடைகள் செய்து வந்துள்ளார். வயதான காலத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்துள்ளனர். 

இந்தநிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மகாலிங்கம் நேற்று முன்தினம் காலை திடீரென இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மகாலிங்கத்தின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். 

இணைபிரியா தம்பதி

அப்போது கணவர் இறந்த அதிர்ச்சியில் துக்கத்திலேயே இருந்த நாகம்மாளும் நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார். பல ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதி சாவிலும் இணைபிரியாமல் இறந்துள்ளனர் எனக்கூறி அந்த பகுதியினர் தம்பதியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Next Story