லால்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 16 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
லால்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 16 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லால்குடி,
லால்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 16 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போலீஸ் நிலையத்தில் ஆய்வு
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி நேற்று முன்தினம் இரவு லால்குடி போலீஸ் நிலையத்துக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ்நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், முதல்தகவல் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது பதிவேடுகளை முறையாக பராமரிக்காமலும், ஒரு சிலர் போலீஸ் நிலையத்தில் இருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு பணியில் இல்லாமல் இருந்ததும், மேலும் சிலர் பணியில் அலட்சியமாக இருந்ததும் தெரியவந்தது.
16 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
இதையடுத்து லால்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, ஏட்டுக்கள் சுரேஷ்குமார், சந்திரசேகர், ராபர்ட்ஜேம்ஸ், குமரவேல், பெண் போலீஸ் ஏட்டு கவுரி, போலீஸ்காரர்கள் சரவணன், இளங்குமார், சுரேஷ்பாண்டி, ஈஸ்வரன், மூர்த்தி, ஆனந்த், புண்ணியமூர்த்தி, பிரபாகரன், பெண் போலீசார் மஞ்சுளா, திவ்யா உள்ளிட்ட 16 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், அவர்களுக்கு பதிலாக ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 16 பேரை லால்குடி போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. லால்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 16 போலீசார் ஒரேநேரத்தில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் திருச்சி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story