சிறுகனூர் அருகே வெடிபொருள் வெடித்து பெண்ணின் கால் சிதைந்தது பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு
சிறுகனூர் அருகே வெடிபொருள் வெடித்து நடந்து சென்ற பெண்ணின் கால் சிதைந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சமயபுரம்,
சிறுகனூர் அருகே வெடிபொருள் வெடித்து நடந்து சென்ற பெண்ணின் கால் சிதைந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
வெடிபொருள் வெடித்தது
சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. கல் குவாரியில் இருந்து தினமும் ஏராளமான லாரிகள் கற்களை ஏற்றிக்கொண்டு பாடாலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும், அந்த ஊரில் உள்ள ஆதிதிராவிடர் தெரு வழியாகவும் ஏராளமான லாரிகள் சென்று வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மனைவி வசந்தி (வயது 35) என்பவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏதோ வெடிபொருள் வெடித்துள்ளது. இதில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிதைந்தது. இதனால் அவர் அலறி துடித்தார்.
போலீசார் விசாரணை
இது பற்றிய தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த வீதி வழியாக லாரியில் கற்களை கொண்டு செல்லும் போது, அதில் இருந்து கல்குவாரியில் பயன்படுத்தும் வெடிபொருள் தவறி கீழே விழுந்து இருக்கலாம் என்றும், அதை அவர் மிதித்த போது வெடித்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சாலை மறியல்
இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் பாடாலூர் -புள்ளம்பாடி சாலையில் அமர்ந்து இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் கல் குவாரிகளை மூட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்து மற்றும் போலீசார் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு ஊட்டத்தூர் கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story