விவசாயி கத்தியால் குத்திக்கொலை
காதல் விவகார முன்விரோதத்தில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:
காதல் விவகாரம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைப்பூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 46). விவசாயி. இவருடைய மனைவி சுலோச்சனா. இந்த தம்பதிக்கு கவியரசன், அரவிந்த் என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கண்ணனின் மகளை அதே ஊரை சேர்ந்த நாகராஜ்- குள்ளாயி தம்பதியின் மகன் அஜித்குமார்(வயது 19) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கண்ணன் தனது மகளை, உறவினர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.
கொலை மிரட்டல்
இதன் காரணமாக, கண்ணன் குடும்பத்திற்கும், அஜித்குமாரின் குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கண்ணன்-சுலோச்சனா தம்பதி, தங்களுக்கு பாதுகாப்பு தரும்படி தூத்தூர் போலீஸ் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் மனு கொடுத்தனர். மேலும் அஜித்குமாரின் சகோதரர்களான அருண்குமார், வினோத்குமார், விஜய்குமார், முத்துக்குமார் ஆகியோர் தினமும் மது குடித்து விட்டு, கண்ணன் வீட்டருகே சென்று அவரது குடும்பத்தினரை ஆபாசமாக திட்டி, கண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும் கண்ணனை, அருண்குமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அஜித்குமாரின் குடும்பத்தினரை அழைத்து விசாரிப்பதோடு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு தரும்படியும் கேட்டுள்ளார்.
கத்தியால் குத்தினார்
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ உணவு சமைக்கலாம் என்று எண்ணிய கண்ணன், வைப்பூர் கிராமத்தில் உள்ள மீன் குட்டைக்கு மீன் வாங்க ஒரு ேமாட்டார் சைக்கிளில் உறவினர்கள் 2 பேருடன் சென்றுள்ளார். மீன் குட்டை அருகே ஏற்கனவே காத்திருந்த அஜித்குமாரின் சகோதரர்கள், கண்ணனிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் அருண்குமார், கண்ணனை சரமாரியாக குத்தி உள்ளார்.
இதில் நிலைகுலைந்த கண்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது தூரம் சென்றபோதே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணனின் உடலை தூக்கிச்சென்று, தூத்தூர் போலீஸ் நிலையத்தின் முன்பு வைத்தனர்.
முற்றுகை
மேலும், உயிருக்கு ஆபத்து இருப்பதாக கண்ணன் பலமுறை புகார் தெரிவித்தும் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால்தான் கண்ணன் கொலை செய்யப்பட்டதாகவும், கண்ணனின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மணி மற்றும் துணை சூப்பிரண்டுகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கண்ணனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
6 பேர் மீது வழக்கு
பின்னர் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அருண்குமார், அஜித்குமார், விஜயகுமார், முத்துக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story