பெண்ணின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை கிராம மக்கள் முற்றுகை
கருக்கலைப்பு செய்ததால் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
பெண் சாவு
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அந்த மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்த கடலூர் மாவட்டம் பெண்ணாடம், கொத்தட்டை கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண், திருமணமாகாத நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி, அந்த கருவை கலைப்பது சம்பந்தமாக அந்த செவிலியரிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவர், அந்த பெண்ணை ஆண்டிமடம் அருகே அன்னங்காரங்குப்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வரவழைத்து கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நிலை மோசமான நிலையில் அந்த பெண்ணை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதற்கிடையே அந்த பெண்ணுடன் வந்த ஆண் நண்பர் தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தில் கருக்கலைப்பு செய்த செவிலியரை, ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஊராட்சி தலைவரின் மகன்
இந்நிலையில் இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கொத்தட்டை கிராம மக்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்து, முற்றுகையிட்டு பெண்ணின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி அந்த பெண்ணின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தினார்.
இதில், அந்த பெண்ணுடன் வந்தவர், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவரின் மகன் என்பதும், அந்த பெண்ணை கர்ப்பமாக்கியவர் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விட்டதாக அவர்களுடைய புகைப்படத்தை இன்ஸ்பெக்டர், முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் காட்டினார்.
போராட்டம்
அதனை நம்பாத கிராம மக்கள், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த முக்கியஸ்தர்கள் சிலரிடம், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ததற்கான புகைப்படத்தை இன்ஸ்பெக்டர் காட்டினார். இதையடுத்து கிராம மக்களிடம் முக்கியஸ்தர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமரசம் ஏற்பட்டு, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையே இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து தயார் நிலையில் இருந்தது. அவரது உறவினர்களிடம், போலீசார் கையெழுத்து வாங்கிக்கொண்டு அந்த பெண்ணின் உடலை ஒப்படைத்தனர். இதையடுத்து உறவினர்கள், அவரது உடலை அடக்கம் செய்ய சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையிலான போலீசார் நேற்று காலை முதல் மாலை வரை அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story