சட்டவிரோத கல்குவாரிகள் குறித்து மந்திரி முருகேஷ் நிரானியை சந்தித்து பேசுவேன்; சுமலதா சொல்கிறார்
மண்டியாவில் நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்து மந்திரி முருகேஷ் நிரானியை சந்தித்து பேசுவேன் என்று சுமலதா எம்.பி. தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: மண்டியாவில் நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்து மந்திரி முருகேஷ் நிரானியை சந்தித்து பேசுவேன் என்று சுமலதா எம்.பி. தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடிகையும், எம்.பி.யுமான சுமலதா அம்பரீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
போராட்டம் தொடரும்
மண்டியாவில் நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக ஒரு எம்.பி.யாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். கல்குவாரிகளுக்கு எதிராக என்னுடைய போராட்டம் தொடரும். நான் யாருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மண்டியாவில் சட்டவிரோத கல்குவாரிகள் நடந்து வருகிறது. அதனை உடனடியாக நிறுத்த வேணடும். இந்த விவகாரத்தில் நான் யார் மீதும் குற்றச்சாட்டு கூறவில்லை.
இந்த விவகாரம் குறித்து மந்திரி முருகேஷ் நிரானியை சந்தித்து பேச உள்ளேன். அவரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன். இன்னும் 3 அல்லது 4 நாட்களில் அவரை சந்தித்து பேசுவதுடன், மண்டியாவில் நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகளை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுப்பேன். கே.ஆர்.எஸ். அணை விவகாரத்தில் நான் சான்றிதலோ, அறிக்கையோ வழங்க முடியாது. அதுபற்றி அதிகாரிகள் தான் அறிக்கை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெயர் கிடைக்க வேண்டும்...
மேலும் கே.ஆர்.எஸ். அணை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு பிரசாரத்திற்காக, இந்த பிரச்சினை குறித்து பேசுவதாக டி.கே.சிவக்குமார் கூறி இருப்பது குறித்து சுமலதாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த சுமலதா, ‘‘கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக, எனக்கு கிடைத்த தகவலின்படி கூறினேன். எனக்கு பெயர் கிடைக்க வேணடும் என்பதற்காக இந்த குற்றச்சாட்டை கூறவில்லை’’ என்றார்.
இதற்கிடையில், சுமலதாவை, நடிகர் அம்பரீசின் ரசிகர்கள் சந்தித்து, ‘‘மண்டியாவில் நமது சக்தியை காட்ட, புதிய கட்சியை தொடங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்கள். அப்போது அந்த ரசிகர்களிடம், ‘‘அம்பரீஷ் வகுத்து கொடுத்த பாதையில் செல்வேன். அவரது பெயரை காப்பாற்றும்படி நடந்து கொள்வேன். நீங்கள் தவறான பாதையில் செல்ல கூடாது’’ என்று சுமலதா கூறினார்.
Related Tags :
Next Story