தாராபுரத்தில் கடன் தொல்லையால் பர்னிச்சர் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை


தாராபுரத்தில் கடன் தொல்லையால் பர்னிச்சர் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2021 9:16 PM IST (Updated: 12 July 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் கடன் தொல்லையால் பர்னிச்சர் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

தாராபுரம்:
தாராபுரத்தில் கடன் தொல்லையால் பர்னிச்சர் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
தொழில் செய்ய கடன்
தாராபுரம் பூக்கடை வீதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவர் வசிக்கும் பகுதி அருகே ‘அய்யப்பன் ஸ்டோர்’ என்ற பெயரில் பர்னிச்சர் மற்றும் ஆயில் ஸ்டோர் வைத்து நடத்தி வந்தார்.
கொரோனா காலத்தில் பர்னிச்சர் கடையில் வாங்கி வைத்திருந்த கட்டில், பீரோ, மேஜை, நாற்காலிகள் ஆகியவைகளை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இவர் தொழிலுக்காக வங்கி மற்றும் நண்பர்கள் உள்பட பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து தற்கொலை
அய்யப்பன் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வங்கி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வெளியாட்களும் கொடுத்த கடனை கேட்டு வீட்டுக்கு வந்ததால் மனமுடைந்த அய்யப்பன் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். 
இதைக் கண்ட அவரது மனைவி பிரியா ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் அய்யப்பனை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story