நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை


நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை
x
தினத்தந்தி 12 July 2021 10:05 PM IST (Updated: 12 July 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் தொடர் மழை பெய்து வருவதால், அபாயகரமான இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி,

நீலகிரியில் தொடர் மழை பெய்து வருவதால், அபாயகரமான இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொடர் மழை

நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. 

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால், ஆங்காங்கே சாலைகளில் மரக்கிளைகள் விழுந்து வருகின்றன. இதனால் மரங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நிற்பதையும், வாகனங்கள் நிறுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

42 குழுக்கள் கண்காணிப்பு

இந்த நிலையில் நேற்று ஊட்டியில் சாரல் மழை பெய்தது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

அதனபடி நீலகிரியில் 6 தாலுகாக்களில் 456 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தொடர் மழை பெய்வதால் வீடுகளின் சுவர்கள், சுற்று சுவர்கள் மழை நீரில் ஊறி விழும் அபாயம் இருக்கிறது. இதுபோன்ற இடங்களில் வசிப்பவர்கள் நிவாரண மையங்களில் வந்து தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மழை விட்ட பிறகு வீடுகளுக்கு திரும்பலாம். மொத்தம் 42 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு

தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு மரம் அறுக்கும் எந்திரங்கள், பொக்லைன் எந்திரங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளது. 

இதுதவிர உரிய பயிற்சி பெற்ற 2,529 முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். 283 அபாயகரமான இடங்களில் 43 இடங்கள் அதிக நிலச்சரிவு ஏற்பட கூடிய இடங்கள் என்று கண்டறியப்பட்டது. அங்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மழை அளவு

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம்(மில்லி மீட்டர்) வருமாறு:- ஊட்டி-6, நடுவட்டம்-22, கிளன்மார்கன்-14, அவலாஞ்சி-41, அப்பர்பவானி-28, கூடலூர்-13, தேவாலா-15, பந்தலூர்-10.8, சேரங்கோடு-12 என பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 4 சென்டி மீட்டர் மழை பெய்தது.


Next Story