கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை தற்காலிக செவிலியர்கள் முற்றுகை
பணிநீட்டிப்பு வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தற்காலிக செவிலியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கள்ளக்குறிச்சி
143 செவிலியர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக 143 செலவிலியர்கள், 20 சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். சுமார் 2 மாதங்களாக பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் திடீரென அவர்களை பணிக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பணிநீட்டிப்பு மற்றும் சம்பளம் வழங்கக்கோரி அவர்கள் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். மேலும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரையும் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது சம்பளம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், பணி நீட்டிப்பு சம்பந்தமாக மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிப்பதாகவும் கலெக்டர் கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் பணிநீட்டிப்பு மற்றும் சம்பளம் வழங்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று திடீரென முற்றுகையிட்டனர். அப்போது பணி நீட்டிப்பு, சம்பளம் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.
போராட்டம் குறித்து அவர்கள் கூறும்போது. வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த நாங்கள் எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தையும் பிரிந்து அரசு மருத்துவமனையில் கொரோனா பணியை மேற்கொண்டு வந்தோம். ஆனால் திடீரென எங்களை பணிக்கு வர வேண்டாம் என கூறியதால் நாங்கள் வேலையின்றி சிரமப்படுகிறோம். எனவே எங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். இதுநாள்வரை பணி புரிந்ததற்கான சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்றனர்.
கோரிக்கை மனு
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் ஸ்ரீதரிடம் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து தற்காலிக செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை செவிலியர்கள் முற்றுகையிட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story