திருச்செங்கோட்டில் மருந்து கடையில் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது
திருச்செங்கோட்டில் மருந்து கடையில் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஈரோடு சாலையில் தனியாருக்கு சொந்தமான மருந்து கடையில் முறையாக எம்.பி.பி.எஸ் படிக்காத ஒருவர் மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று மருத்துவத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அந்த மருந்தகத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு மோகன்ராஜ் என்பவர் மருந்து கடையின் உள்ளே டாக்டருக்கு படிக்காமல் சில நோயாளிகளுக்கு காய்ச்சலுக்கு ஊசி போட்டு மருந்து கொடுத்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
விசாரணையில் பி.காம் பட்டதாரியான மோகன்குமார் அவருடைய மனைவியின் மருந்தாளுநர் சான்றிதழை வைத்து நோயாளிகளுக்கு ஊசி போட்டு மாத்திரை மருந்து கொடுத்ததது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 11 வகையான ஊசி, மருந்து மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் போலீசார் மோகன்குமாரை கைது செய்து திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அவரிடம் மேலும் விசாரணை நடத்திய போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த ஆய்வில் டாக்டர்கள் ரங்கநாதன், செந்தில் குமார், பிரபு, அன்புச்செல்வி, திருச்செங்கோடு மருத்துவ அலுவலர் தேன்மொழி, டாக்டர் மோகன பானு ஆகியோர் உடன் சென்றனர். திருச்செங்கோட்டில் போலி டாக்டர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story