கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியை தேசிய மருத்துவ குழுவினர் விரைவில் ஆய்வு
செயல்பாட்டு அங்கீகாரம் வழங்குவதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியை தேசிய மருத்துவ குழுவினர் விரைவில் ஆய்வு செய்ய இருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி
அரசு மருத்துவ கல்லூரி
கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் ரூ.381 கோடியே 76 லட்சம் மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கடந்த மாதம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.
மருத்துவ குழுவினர் ஆய்வு
இந்த நிலையில் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானபணிகளை ஆய்வு செய்தனர். அப்போது நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு, படுக்கை வசதி மற்றும் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரியின் பிரதான கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வுக் கூடம், உடற்கூறியல் அருங்காட்சியகம் மற்றும் உடற்கூறியல் ஆய்வறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? எனவும் கட்டுமான பணியின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து தற்போதுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்பனர்கள், அலுவலக பணியார்கள் குறித்து ஆய்வறிக்கை தயார் செய்தனர். அப்போது மருத்துவக்கல்லூரி டீன் உஷா, மருத்துவர்கள் பழமலை, கல்பனா ஆகியோர் உடன் இருந்தனர்.
தேசிய குழுவினர்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி செயல்படுவதற்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தேசிய மருத்துவ குழுவினர் விரைவில் ஆய்வு செய்ய இருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story