ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிளை லாரி முந்தி சென்றதில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிளை லாரி முந்தி சென்றதில் ஏற்பட்ட தகராறில் தனியார்நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஆற்காடு
லாரி முந்தி சென்றதால் தகராறு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நாதமுனி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28), தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் அருண் (21), பெயிண்டர் ஆக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் ஆற்காட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே ஒரு ஓட்டலில் சாப்பிடச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை முந்திச்சென்று உள்ளது. அப்போது மணிகண்டனும், அருணும் மோட்டார் சைக்கிளில் லாரியை முந்திச் சென்று, லாரியை மடக்கி நிறுத்தி டிரைவரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெட்டிக்கொலை
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த லாரி டிரைவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டன் மற்றும் அருண் ஆகிய இருவரையும் வெட்டி உள்ளர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மற்றும் அருண் இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி வந்துள்ளனர்.
அருண் மோட்டார்சைக்கிளை ஓட்ட, மணிகண்டன் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். சிறிது தூரம் வந்தபோது மணிகண்டன் கீழே சரிந்துள்ளார். அங்கிருந்தவர்கள் வந்து பார்த்தபோது மணிகண்டன் இறந்திருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அருண் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வேலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story