வட மாநில வாலிபர் கைது
கம்ப்யூட்டர் சாதனங்களை திருடிய வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் அரசு கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர் உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் உள்ளிட்ட கம்ப்யூட்டர் சார்ந்த விலை உயர்ந்த சாதனங்களை திருடி சென்று விட்டார். நேற்று காலை அலுவல் பணி காரணமாக நூலகத்தை திறக்க வந்த அதிகாரிகள் நூலகத்தில் மேற்கண்ட பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தியதோடு அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த காட்சிகளின் அடிப்படையில் ராமநாதபுரம் அருகே வழுதூர் பகுதியில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சுரசந்த்பூர் மாவட்டம் கேஞ்சங் கிராமத்தை சேர்ந்த லெட்கோசட் கிப்ஜன் என்பவரின் மகன் மைக்கேல் கிப்ஜன் (வயது 32) என்பவரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் மேற்படி வாலிபர் தான் அரசு கிளை நூலகத்தில் திருடியவர் என தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து திருடப்பட்ட கம்யூட்டர்களை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மைக்கேல் கிப்ஜனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story