கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆராய மண் மாதிரி சேகரிப்பு


கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆராய மண் மாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 12 July 2021 10:38 PM IST (Updated: 12 July 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆராய மண் பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்டது.

ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆராய மண் பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்டது.

பழமையான கட்டிடங்கள்

நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது ஊட்டியின் மையப்பகுதியில் சந்தை அமைத்தனர். அப்போது சில கடைகள் மட்டும் இருந்தது. பின்னர் நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் மார்க்கெட்டாக மாற்றப்பட்டு, கூடுதலாக கடைகள் கட்டப்பட்டது.

தற்போது காய்கறி, பழங்கள், மளிகை, துணிகள், தேநீர், காலணி, பேன்சி உள்பட 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதற்காக 18 நுழைவுவாயில்கள் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால், அந்த கட்டிடங்கள் பழமையானதாக உள்ளது.

மண் பரிசோதனை

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 80 கடைகள் சேதம் அடைந்தது. பின்னர் புதிதாக கடைகள் கட்டப்பட்டது. மார்க்கெட்டில் உள்ள பழங்கால கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கடைகள் நெருக்கமாக உள்ளதால், அதற்கான வரைபடம் இல்லை. இதனால் அரசு திட்டங்களை நிறைவேற்றுவது சிக்கலாக உள்ளது. இதைத்தொடர்ந்து நகராட்சி மார்க்கெட்டுகளில் கட்டிடங்களின் உறுதி தன்மையை அறிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது. 

இதையடுத்து ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 2 இடங்களில் பழமையான கட்டிடங்கள் மற்றும் பிற கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆராய்வதற்காக மண் மாதிரி சேகரிக்கப்பட்டது. இது தனியார் மூலம் பரிசோதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. மேலும் வரைபடம் தயாரிப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

திட்ட மதிப்பீடு

இதுகுறித்து நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் கூறும்போது, தமிழக அரசு அறிவுறுத்தல்படி நகராட்சி மார்க்கெட்டில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தரம் தற்போது எவ்வாறு உள்ளது என்பதை அறிய மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதுவரை முழுமையாக வரைபடம் இல்லை. இதனை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் விரிவாக்க பணிகள் நடைபெற திட்ட மதிப்பீட்டுக்கு உதவும் என்றார். இதேபோன்று குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் மண் பரிசோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டது.


Next Story