எஸ்.சந்திராபுரத்தில் கல்குவாரிக்கு அனுமதி வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு


எஸ்.சந்திராபுரத்தில் கல்குவாரிக்கு அனுமதி வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 July 2021 10:53 PM IST (Updated: 12 July 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே எஸ்.சந்திராபுரத்தில் கல்குவாரிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே எஸ்.சந்திராபுரத்தில் கல்குவாரிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கல் குவாரி

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

அப்போது எஸ்.சந்திராபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சோலபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.சந்திராபுரம் அருகில் தனியாருக்கு சொந்தமான 2 கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

 இங்கு கற்களை வெட்டி எடுப்பதற்கு வெடிமருந்துகள் பயன்படுத்துவதால் வெடி வெடித்து கற்கள் சிதறி அருகில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், வண்டி பாதைகளில் விழுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அருகில் உள்ள வீடுகளில், தண்ணீர் தொட்டிகள், கிணற்று தடுப்பு சுவர் ஆகியவற்றில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுகின்றன.

காற்று மாசு

வெடி வைப்பதால் ஏற்படும் புகைமூட்டம் மற்றும் பாறைத்தூள் காற்றில் பறந்து உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரில் விழுகின்றன. இதனால் காற்று மாசுபடுவதோடு மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் பாதிக்கப்படுகிறது.

 ஏற்கனவே பொதுமக்கள் ஒன்று கூடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கல் குவாரிகள், கிரசர், எம்சான்ட் மற்றும் தார் பிளான்ட் ஆகிய கனிமம் சார்ந்த எந்தவிதமான தொழிற்சாலைகளும் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். 

எனவே கல்குவாரிகள் சம்பந்தமான தொழில்களுக்கு அனுமதி வழங்கினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கல்குவாரி செயல்பட அனுமதி அளிக்க கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆய்வு செய்து நடவடிக்கை

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் கல்குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்து உள்ளனர். இதுதொடர்பாக கல்குவாரியில் அதிகரிகள் ஆய்வு செய்வார்கள். அதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story