எஸ்.புதூர் அருகே குடித்து விட்டு தகராறு செய்த கணவரிடம் வேலைக்கு போ என்று மனைவி கூறியதால் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே குடித்து விட்டு தகராறு செய்த கணவரிடம் வேலைக்கு போ என்று மனைவி கூறியதால் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடிபோதையில் தகராறு
எஸ்.புதூர் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு சுசீலாதேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் வடிவேல் மது அருந்திவிட்டு, கூலி வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மனைவியுடன் சண்டை போட்டார். அப்போது அவரது மனைவி தினமும் குடித்து விட்டு, சண்டை போடுகிறாயே ஒழுங்கா வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்க வழியை பாருங்க. நமக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.
மனைவி தன்னை வேலைக்கு போக சொல்கிறாளே என்று ஆத்திரம் அடைந்த வடிவேல் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
வழக்கமாக வீட்டில் சண்டை போட்டு விட்டு அதே கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வடிவேல் தங்குவது வழக்கம். அது போல தான் சம்பவத்தன்று சண்டை போட்டு விட்டு சென்ற வடிவேல் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுசீலாதேவி தனது மாமியார் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு மாமியார் வீட்டு எதிரே உள்ள ஆடு கட்டும் கொட்டகையில் கணவர் சேலையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கணவரது உடலை பார்த்து கதறி அழுதார். அங்கு வந்த அவரது குழந்தைகளும் கதறி அழுதனர். தன்னிடம் சண்டை போட்டு விட்டு கணவர் இப்படி முடிவு எடுத்து விட்டாரே என்று சுசீலாதேவி கண்கலங்கி அழுதது பார்ப்போரின் கண்களை ஈரமாக்கியது.
போலீசில் புகார்
இதுகுறித்து அவர் உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய வடிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண்டித்ததால் தூக்குப்போட்டு வடிவேல் இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். குடி குடியை(குடும்பம்) கெடுக்கும் என்பது போல வடிவேலின் மதுபோதை குடும்பத்தில் சண்டையை ஏற்படுத்தியதோடு அவரது உயிரையும் குடித்து விட்டது. அவர் இறந்ததால் அவரது மனைவியும், 3 குழந்தைகளும் நிர்கதியாகி விட்டனர் இந்த மதுவால்.