திட்டக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்த கூறி கோவில் பெண் அதிகாரியை தாக்க முயற்சி
திட்டக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்த கூறி கோவில் பெண் அதிகாரியை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதை கண்டித்து அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திட்டக்குடி,
திட்டக்குடியில் பழமைவாய்ந்த அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு எதிரே உள்ள குளத்தின் வடக்கு புறத்தில் 7 கட்டிடங்களில் 13 கடைகள், 2 வீடுகள், ஒரு தனியார் மருத்துவமனைகள் கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் அகற்றும் பணி தொடங்கியது.
தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அப்போது இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் அசோக்குமார், உதவிஆணையர் பரணிதரன், தக்கார் லெட்சுமிநாராயணன், கோவில் செயல் அலுவலர் தின்ஷா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
பணியை நிறுத்த வேண்டும்
இதற்கிடையே நேற்று மாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர், தங்கள் கட்டிடத்தை இடிக்க கூடாது, இதற்காக கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளதாகவும், கட்டிடத்தை இடிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தங்களுக்கு அதுபோன்ற உத்தரவு எதுவும் வரவில்லை எனக்கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கோவில் செயல்அலுவலர் தின்ஷா என்கிற பெண் அதிகாரியை திட்டி தாக்க முயற்சித்தார். அப்போது அங்கிருந்த சக அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒன்று சேர்ந்து தின்ஷாவை பாதுகாப்பாக போலீஸ் நிலையத்துக்குள் அழைத்து சென்றனர்.
சாலை மறியல் முயற்சி
தொடர்ந்து பெண் அதிகாரியை தாக்க முயன்றவரை கைது செய்ய கோரியும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளித்திட கோரியும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் சிலர் சேர்ந்து அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடன் அங்கிருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் முயற்சியை அவர்கள் கைவிட்டனர். அதோடு தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியும் நடைபெற்றது.
இன்றும் நடக்கிறது
தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழலில் பெண் அதிகாரி ஒருவரை ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த பணி முழுமைபெறும் வரையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story