தடுப்பூசி போட நள்ளிரவு முதல் மையங்களில் காத்திருந்த பொதுமக்கள்


தடுப்பூசி போட நள்ளிரவு முதல்  மையங்களில் காத்திருந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 July 2021 11:51 PM IST (Updated: 12 July 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகர பகுதியில் தடுப்பூசி போட நள்ளிரவு முதல் மையங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர். இதில் முதலில் வந்த 9,300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கோவை

கோவை மாநகர பகுதியில் தடுப்பூசி போட நள்ளிரவு முதல் மையங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர். இதில் முதலில் வந்த 9,300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

கொரோனா தொற்று

தமிழக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை தான் முதலிடத்தில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

ஆனால் போதிய அளவு தடுப்பூசி கிடைக்காததால் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னைக்கு 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. இந்த தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. 

நள்ளிரவு முதல் குவிந்தனர்

இதில் கோவைக்கு 24 ஆயிரம் டோஸ் தடுப்பூசி கிடைத்தது. இதையடுத்து ஒரு வாரத்திற்கு பின்னர்  கோவை மாநகராட்சி பகுதியில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி பகுதியில் 31 மையங் களுக்கு தலா 300 தடுப்பூசிகள் வீதம் பிரித்து அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள தடுப்பூசி மையங்கள் முன்பு  நள்ளிரவு முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிலர் அங்கேயே படுத்து தூங்கினர். அதி காலை நேரத்தில் மேலும் பொதுமக்கள் குவிந்ததை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

9,300 பேருக்கு தடுப்பூசி 

பின்னர் அனைவரும் வரிசையாக நிறுத்தப்பட்டு முதலில் வந்த 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சில மையங்களில் கூட்டம் காரணமாக பொதுமக்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவைக்கு முதல்கட்டமாக 24 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 17 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டு உள்ளது. அது விரைவில் வந்துவிடும். 31 மையங்களில் தலா 300 வீதம் 9,300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இனி வரும் நாட்களில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும். 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story