ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை பணம் கொள்ளை


ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை பணம் கொள்ளை
x
தினத்தந்தி 12 July 2021 11:59 PM IST (Updated: 12 July 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

வடவள்ளியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள், அங்கு திருடிய காரை விமான நிலையம் அருகே நிறுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

வடவள்ளி

வடவள்ளியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள், அங்கு திருடிய காரை விமான நிலையம் அருகே நிறுத்திவிட்டு தப்பிச்சென்றனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

ரியல் எஸ்டேட்  அதிபர் 

கோவை வடவள்ளி ஐ.ஓ.பி. காலனி ரங்கபாஷ்யம் நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 68), ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி பெரிய நாயகி (62). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் பெங்களூருவில் உள்ளார். மற்றொருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி சுந்தரம் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு சென்றார். 

பின்பக்க கதவு உடைப்பு 

இந்த நிலையில் சிங்காநல்லூர் போலீசார் கடந்த 10-ந் தேதி திடீரென்று சுந்தரம் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார் கள். அதில் அவருடைய கார் கோவை விமான நிலையத்தின் பின்புறத்தில் நிற்பதாக தெரிவித்தனர். 

இதையடுத்து உடனடியாக சுந்தரம் கோவை திரும்பினார். சிங்கா நல்லூர் சென்று தனது காரை பார்த்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வந்தார். அங்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை 

உள்ளே சென்றபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. அதில் இருந்த ரூ.5 லட்சத்து 5 ஆயிரம், 16½ பவுன் நகை, வீட்டில் இருந்த 3 டி.வி.க்கள், செல்போன், லேப்டாப் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.

அதை மர்ம ஆசாமிகள் திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. அவற் றின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டில் நிறுத்தி இருந்த காரையும் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று கோவை விமான நிலையத்தின் பின்புறத்தில் நிறுத்திவிட்டு சென்றதும் தெரியவந்தது. 

போலீசார் விசாரணை 

இது குறித்து சுந்தரம் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் கைவிரல் ரேகை நிபுணர்களும் அங்கு வந்து, பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். 

மேலும் போலீசார் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதுடன், சுந்தரம் வீட்டில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

 இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, சுந்தரம் வீட்டில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள், அவருடைய காரையும் திருடிவிட்டு பின்னர் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து விமான நிலையம் அருகே அதை நிறுத்திவிட்டு சென்று உள்ளனர். 

எனவே கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். 


Next Story