இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
உயர்மின் அழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சட்டப்படியான இழப்பீடுகளை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
குடியேறும் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்களுக்கு தற்போது வரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்று கூறி விவசாயிகள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் சட்டப்படியான இழப்பீடுகளை வழங்க வலியுறுத்தி 12-ந் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
விவசாய சங்கத்தின் போராட்டம் நடைபெறுவது உறுதியானதை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் நுைழவு வாயில் முன்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, ரமேஷ் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
விவசாயிகள் வருவதை தடுக்க பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தன.
கலெக்டருடன் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் காலை 11 மணியளவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திரண்டனர். அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘‘உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் சட்டப்படியான இழப்பீடுகளை வழங்க வேண்டும். அனைத்து வகையான இழப்பீடுகளையும் சட்டப்படி விவசாயிகளின் வங்கி கணக்கில் முழுமையாக செலுத்திய பின் வேலைய தொடங்க வேண்டும்’’ என்று கோஷங்களை எழுப்பினர்.
போராட்ட குழுவினருடன் கலெக்டர் முருகேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா ஆகியோர் உடனிருந்தனர்.
பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை மனுவாக அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
8 மணி நேரம் நடந்தது
பின்னர் போராட்ட குழுவினர், சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மீண்டும் கலெக்டரிடம் வழங்கி 2-ம் முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக எழுத்து பூர்வமான கடிதம் தருவதாக கலெக்டர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இரவு 7 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த கலைந்து சென்றனர். சுமார் 8 மணி நேரம் வரை நடந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பாக இருந்தது.
Related Tags :
Next Story