திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். இதனால் தினமும் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பெயரை பதிவு செய்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் தட்டுப்பாடு ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 16 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இதனால் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 24 அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கிடையே நேற்று மேலும் 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு வந்துள்ளன. இதில் திண்டுக்கல்லுக்கு 5 ஆயிரத்து 500-ம், பழனிக்கு 7 ஆயிரத்து 500-ம் ஒதுக்கப்பட்டது. சுற்றுலா தலங்களான பழனி, கொடைக்கானலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இதனால் பழனிக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நேற்று அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மக்கள் குவிந்தனர். அதிலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 342 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story