கல்குவாரியை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம்
கல்குவாரியை மூடக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
கல்குவாரியை மூடக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
நத்தம் தாலுகா நடுமண்டலம் கிராமம் தேவர்நகரை சேர்ந்த பொதுமக்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்கள் பகுதியில் செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராம மக்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் கிராம மக்கள் தங்களுடைய கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர் அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
அந்த மனுவில், எங்கள் ஊரில் செயல்படும் கல்குவாரியால் விவசாயம் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். இதனால் அதை மூடக்கோரி கடந்த மாதம் போராட்டம் நடத்தினோம். இதனால் கல்குவாரி செயல்படாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கல்குவாரி செயல்பட தொடங்கி இருக்கிறது. இதனால் அங்கு நாங்கள் வாழ்வதற்கான சூழல் இல்லாமல் போய்விட்டது. எனவே கிராமத்தில் நாங்கள் வாழ வேண்டுமெனில் கல்குவாரியை மூட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
விவசாயிகள் மனு
இதேபோல் வேடசந்தூர் வட்டார மீனவர்கள், குடகனாறு அணை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடகனாறு அணையை மீன் குத்தகைக்கு விடுவதை எதிர்த்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், குடகனாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் ஷட்டர்கள் பழுதானதால் அணைக்கு வந்த தண்ணீர் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே அணையில் சீரமைப்பு, ஷட்டர்களை மாற்றுதல் ஆகியவற்றுக்கு ஆயத்த பணிகள் நடக்கின்றன. இதற்காக புதிய ஷட்டர்கள், தூண்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, அணையில் தற்போது இருக்கும் எஞ்சிய தண்ணீரும் வெளியேற்றப்பட்டு விடும். இந்த நிலையில் தண்ணீர் வரத்து இல்லாத, தண்ணீரை தேக்க முடியாத அணையில் மீன் வளர்த்து பிடிப்பதற்கு குத்தகை விடுவதற்கு ஏலம் நடத்த போவதாக தெரியவந்துள்ளது. இதனை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story