சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மந்திரி முருகேஷ் நிரானியை சந்தித்து நடிகை சுமலதா புகார்


சுமலதா எம்.பி.
x
சுமலதா எம்.பி.
தினத்தந்தி 13 July 2021 1:19 AM IST (Updated: 13 July 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில் சட்டவிரோத கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கனிம வளத்துறை மந்திரி முருகேஷ் நிரானியை நேரில் சந்தித்து நடிகை சுமலதா எம்.பி. புகார் கடிதம் வழங்கினார்.

பெங்களூரு: மண்டியாவில் சட்டவிரோத கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கனிம வளத்துறை மந்திரி முருகேஷ் நிரானியை நேரில் சந்தித்து நடிகை சுமலதா எம்.பி. புகார் கடிதம் வழங்கினார்.

கே.ஆர்.எஸ். அணை

மண்டியா மாவட்டத்தில் குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கல்குவாரி தொழில் நடைபெற்று வருவதாகவும், அதில் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகவும் நடிகை சுமலதா எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதற்கு ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் சுமலதா மற்றும் குமாரசாமி உள்பட ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கனிம வளத்துறை மந்திரி முருகேஷ் நிரானியை பெங்களூருவில் நேற்று மண்டியா தொகுதியின் எம்.பி. சுமலதா நேரில் சந்தித்து பேசினார். அப்போது மண்டியா மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோதமான கல்குவாரி தொழில்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முருகேஷ் நிரானியிடம் சுமலதா கடிதம் வழங்கினார்.

சட்டவிரோத கல்குவாரிகள்

அந்த கடிதத்தில், "மண்டியா மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத கல் குவாரிகளால், பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான் அந்த கல்குவாரிகளை ஆய்வு செய்ய சென்றபோது, அதன் உரிமையாளர்கள் சாலையை மறித்து என்னை ஆய்வு செய்ய விடாமல் தடுத்தனர். கே.ஆர்.எஸ். அணையின் பாதுகாப்பு கருதி அதனை சுற்றி நடைபெற்று வரும் சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story