சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்


சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்
x
தினத்தந்தி 13 July 2021 1:29 AM IST (Updated: 13 July 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சுசீந்திரம்:
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அமைச்சர் ஆய்வு
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மாலை சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்து, கோவிலின், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், கோவிலின் நான்கு தேர்கள், தெப்பகுளம், கோசாலை ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் கோவில் பூசாரிகள் மற்றும் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற, பழமையான, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கோவில்களில் திருப்பணிகளை விரைந்து முடித்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கும்பாபிஷேக பணி
சுசீந்திரம் கோவிலை பொருத்த வரையில் 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்து இருக்க வேண்டும். ஆனால் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இங்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.  
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சாமிதோப்பு தலைமைப்பதி
ஆய்வின்போது அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், நாகர்கோவில் கோட்டாட்சியர் (பொறுப்பு) சொர்ண ராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் மகேஷ், தாமரை பாரதி, சாய்ராம் பார்த்தசாரதி, மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு சென்றார். அங்கு அவரை பால.பிரஜாபதி அடிகளார், பால.ஜனாதிபதி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து தலைமைப்பதியில் தரிசனம் செய்த சேகர்பாபுவுக்கு இனிமம் வழங்கப்பட்டது.
திருவட்டார் கோவில்
முன்னதாக அமைச்சர் சேகர்பாபு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் போன்றவற்றை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது,  ‘பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.   குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களையும் ஒருங்கிணைத்து சீரமைக்க முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து சிறப்பு நிதி ஒதுக்கப்படும். 
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 6 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டது. பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதையடுத்து திருப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். 
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கொள்ளை போய் மீட்கப்பட்ட நகைகள் நீதிமன்றங்களில் இருந்தால் அவற்றை சட்டப்படி மீட்டு கோவிலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story