கர்நாடகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது?; அஸ்வத் நாராயண் பதில்


துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்.
x
துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்.
தினத்தந்தி 13 July 2021 1:36 AM IST (Updated: 13 July 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதில் அளித்துள்ளார்.
துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உள்கட்டமைப்பு வசதிகள்

கர்நாடகத்தில் கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி போடும் பணி முடிவடைந்ததும் கல்லூரிகளை திறக்கும் தேதி முடிவு செய்யப்படும். கல்லூரிகளை திறப்பதில் சவால்கள் உள்ளன. ஆனால் எத்தனை நாட்கள் தான் கல்லூரிகளை மூடி வைத்திருக்க முடியும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நாம் வாழ்க்கையை நடத்த வேண்டியது அவசியம். இந்த கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு. ஒருபுறம் தடுப்பூசி போடும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மற்றொருபுறம் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 6,000 ஐ.சி.யு. படுக்கைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

வேலை வாய்ப்புகள்

தேவையான அளவுக்கு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்களை நியமனம் செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வளர்ச்சியை உறுதி செய்ய மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த நோக்கத்தில் தான் உத்தரபிரதேசத்தில் அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குழந்தைகள் கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

பெங்களூருவுக்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உப்பள்ளியில் தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட இருக்கின்றன. தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. உப்பள்ளி பகுதியில் தொழில் நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story