நெல்லை அருகே கட்டிட காண்டிராக்டர் வெட்டிக் கொலை
நெல்லை அருகே கட்டிட காண்டிராக்டர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த வடக்கு தாழையூத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் கண்ணன் (வயது 35). கொத்தனாரான இவர் கட்டிட காண்டிராக்டராகவும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல் கட்டுமான பணிகளுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைத்தார். பின்னர் மதியம் குடிநீர் பிடிப்பதற்காக லோடு ஆட்டோவில் குடங்களுடன் நெல்லை- மதுரை நான்குவழிச் சாலையில் தாழையூத்தை அடுத்த பண்டாரகுளம் விலக்கு பகுதிக்கு சென்றார்.
அங்குள்ள பொதுக்குழாய் அருகில் கண்ணன் லோடு ஆட்டோவை நிறுத்தி விட்டு, குடங்களில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கு 3 ேமாட்டார் சைக்கிள்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த சுமார் 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கண்ணன் சாலையோர வடிகாலில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றது.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தைப் பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்ற கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக கண்ணன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கண்ணன் கொலை செய்யப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் திரண்டு வந்து, நான்குவழிச்சாலையில் மறியலில் ஈடுபடுவதற்காக புறப்பட்டனர். கண்ணனை கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் பண்டாரகுளம் விலக்கு பகுதிக்கு சென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலையாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்ட பொதுமக்கள் திரும்பி சென்றனர். வடக்கு தாழையூத்து பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இறந்த கண்ணனுக்கு புனிதா (30) என்ற மனைவியும், அஸ்வின் (7), அகில் (6) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story