ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட முடிவா?; ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. பதில்
ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட முடிவா? என்பது குறித்து ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.
மைசூரு: ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட முடிவா? என்பது குறித்து ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.
ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.டி.தேவேகவுடா, கடந்த சில ஆண்டுகளாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவர் கட்சியின் எந்த கூட்டங்களிலும் பங்கேற்பதில்லை. குமாரசாமிக்கும், அவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி, அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து மைசூருவில் நேற்று நிருபர்கள் ஜி.டி.தேவேகவுடாவிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
சுயேச்சையாக போட்டி
நான் 2 ஆண்டுகளாக ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை. அடுத்து வரும் நாட்களில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருக்க வேண்டுமா? அல்லது அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா அல்லது காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டுமா என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் நான் சுயேச்சையாக போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நான், எனது மகன் ஹரீஷ் கவுடாவும் சுயேச்சையாக போட்டியிட்டாலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. சாமுண்டீஸ்வரி, சாமராஜா, உன்சூர், கே.ஆர்.நகர் தொகுதிகளில் எந்த தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன். அந்த அளவு மக்கள் என் மீது நம்பிக்கையும், அன்பும் வைத்துள்ளனர். மக்களும் நீங்கள் சுயேச்சையாக போட்டியிட்டாலும் நாங்கள் வெற்றி பெற வைப்போம் என்று கூறுகிறார்கள்.
எந்த முடிவும் எடுக்கவில்லை
இதனால் அடுத்து வரும் தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிடலாமா என்று யோசித்து வருகிறேன். வருகிற மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல்களிலும் என்னுடைய ஆதரவாளர்கள் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால், மக்களின் முடிவை தெரிந்துகொள்வதற்காக அடுத்த வாரத்தில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அவ்வாறு சுற்றுப்பயணம் செய்து மக்களின் எண்ணங்களை கேட்டு அதன்படி நடந்து கொள்வேன்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா என்னை தொடர்புகொண்டு, கட்சியை விட்டு போக வேண்டாம் என்று கூறியுள்ளார். நான் உள்பட சில முக்கிய தலைவர்களை கட்சியிலேயே வைத்துகொள்ள முடிவு செய்திருப்பதாக தேவேகவுடா என்னிடம் கூறினார்.
2023-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியை வெற்றி பெற செய்து ஆட்சியில் அமர்த்திவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக என்னிடம் தெரிவித்தார். இதனால், கட்சியில் இருந்து விலகுவது குறித்தோ, சுயேச்சையாக போட்டியிடுவது குறித்தோ இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story