பறிமுதல் செய்யப்பட்ட 38 ஆயிரம் வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன
பெங்களூருவில் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல செய்யப்பட்டுள்ள 38 ஆயிரம் வாகனங்களை அகற்ற அதிகாரிகளுக்கு, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல செய்யப்பட்டுள்ள 38 ஆயிரம் வாகனங்களை அகற்ற அதிகாரிகளுக்கு, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
38 ஆயிரம் வாகனங்கள்
பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி மீட்டு செல்லாமல் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை, உரிமையாளர்கள் மீட்டு செல்லாமல் உள்ளனர்.
அவ்வாறு பறிமுதல செய்யப்பட்டுள்ள வாகனங்கள், சிக்கராயனகெரே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆண்டு கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் யாருக்கும் பயன் பெறாமலும், மக்களுக்கு இடையூறாகவும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலான வாகனங்கள் யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு, இரும்பு கடையில் போடும் நிலையில் தான் உள்ளது.
போலீஸ் கமிஷனா் உத்தரவு
அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 4,528 வாகனங்கள், 2016-ம் ஆண்டில் பறிமுதல் செய்திருந்த 5,012 வாகனங்கள், 2017-ம் ஆண்டில் பறிமுதல் செய்த 7,672 வாகனங்கள், 2018-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 6,004 வாகனங்கள், 2019-ம் ஆண்டில் பறிமுதல் செய்திருந்த 5,975 வாகனங்கள், 2020-ம் ஆண்டில் பறிமுதல் செய்திருந்த 6,731 வாகனங்கள், இந்த ஆண்டு பறிமுதல் செய்த வாகனங்கள் என ஒட்டு மொத்தமாக 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கராயனகெரேயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பார்வையிட்டு இருந்தார்.
இந்த நிலையில், அந்த வாகனங்களை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் கோர்ட்டு அனுமதி பெற்று ஏலம் விட்டு விற்பனை செய்யும்படியும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சிக்கராயனகெரேயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறவுப்படுத்தவும், ஏலம் மூலம் விற்பனை செய்யவும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story