ரேஷன் கடையை பா.ஜ.க. எம்.எல்.ஏ. முற்றுகை


ரேஷன் கடையை பா.ஜ.க. எம்.எல்.ஏ. முற்றுகை
x
தினத்தந்தி 13 July 2021 2:06 AM IST (Updated: 13 July 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்களுடன் இணைந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாகர்கோவில்:
ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்களுடன் இணைந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். 
ரேஷன்கடை முற்றுகை
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சில ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம், பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மனு ஒன்றை அளித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த எம்.ஆர்.காந்தி மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் விரைந்து சென்று பொதுமக்களுடன் இணைந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
அரிசி மூடைகள் மாற்றம்
உடனே அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கூறுகையில், இந்த ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லை. தற்போது இருப்பில் உள்ள 20 அரிசி மூடைகளும் மிகவும் மோசமாக உள்ளது. இதனை மாற்றி நல்ல அரிசி வழங்க வேண்டும் என கூறினார்.
இதனைதொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் கோணம் அரசு குடோனில் இருந்து லாரி மூலம் புதிதாக அரிசி மூடைகள் கொண்டு வரப்பட்டன. அதனை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் ஆய்வு செய்த பிறகு ரேஷன் கடைக்கு செல்ல அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து மக்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்பட்டது. அத்துடன் மோசமானதாக கண்டறியப்பட்ட 20 அரிசி மூடைகளை அதிகாரிகள் லாரியில் ஏற்றி எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story