பெங்களூருவில் முதியவரை காரில் கடத்தி மிரட்டி வீட்டை பறித்த 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில் முதியவரை காரில் கடத்தி மிரட்டி வீட்டை பறித்த 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 July 2021 2:11 AM IST (Updated: 13 July 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தனியாக வசித்து வந்த முதியவரை காரில் கடத்தி சென்று, அவரது வீட்டை வேறு ஒருவரின் பெயருக்கு எழுதி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு: பெங்களூருவில் தனியாக வசித்து வந்த முதியவரை காரில் கடத்தி சென்று, அவரது வீட்டை வேறு ஒருவரின் பெயருக்கு எழுதி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

முதியவர் கடத்தல்

பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லத்தஹள்ளியில் வசித்து வருபவர் ராகவ்ராம்(வயது 87). இவர், தனியாக வசித்து வருகிறார். ராகவ்ராமின் உறவினர்கள் மைசூருவில் வசித்து வருகிறார்கள். அடிக்கடி பெங்களூருவுக்கு வந்து ராகவ்ராமின் உடல் நலம் குறித்து விசாரித்து செல்வது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்பு மைசூருவில் இருந்து யாரும் பெங்களூருவுக்கு வரவில்லை. இதனால் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இதனை கவனித்த மர்மநபர்கள் சிலர், ராகவ்ராம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள். அவர்களில் ஒருவர் தனது பெயர் பிரபு எனக்கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் மல்லத்தஹள்ளியில் உள்ள வீட்டை தன்னுடைய பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கும்படி 3 பேரும் கூறியுள்ளனர். இதற்காக சொத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்படியும் ராகவ்ராமை மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

வீட்டை எழுதி வாங்கினர்

உடனே ராகவ்ராமை, அங்கிருந்து காரில் கடத்தி சென்ற 3 பேரும், பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் தாங்கள் சொல்லும் பத்திரத்தில் கையெழுத்து போடாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறி ராகவ்ராமை மர்மநபர்கள் மிரட்டியுள்ளனர். மேலும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, மல்லத்தஹள்ளியில் உள்ள வீட்டை வேறு ஒருவருக்கு எழுதி கொடுப்பதாக கூறி, ராகவ்ராமிடம் கையெழுத்து வாங்கி மர்மநபர்கள் மாற்றி உள்ளனர்.

அத்துடன் வங்கிக்கு அழைத்து சென்று, அவரது கணக்கில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும் மர்மநபர்கள் எடுத்துவிட்டு, அவரை விடுவித்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் பிரபு உள்ளிட்ட 3 பேர் மீது ராகவ்ராமின் உறவினர் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 நபா்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story