நாகர்கோவிலில் காங்கிரசார் சைக்கிள் பேரணி
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் சைக்கிள் பேரணி
நாகர்கோவில், ஜூலை.13-
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து வேப்பமூடு வரை நேற்று சைக்கிள் பேரணி நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு சைக்கிளை ஓட்டி சென்றார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் சைக்கிள் ஓட்டினார்கள்.
இந்த சைக்கிள் பேரணி சுற்றுலா மாளிகை முன் வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். சைக்கிள் பேரணிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே தடையை மீறி சைக்கிள் பேரணி சென்ற விஜய்வசந்த் எம்.பி., மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகர தலைவர் அலெக்ஸ் உள்பட 34 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story