கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு அனுமதி; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு அனுமதி; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 13 July 2021 2:20 AM IST (Updated: 13 July 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய கோரிய பொது நல மனுவை தள்ளுபடி செய்ததுடன், தேர்வு நடத்த அனுமதி வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய கோரிய பொது நல மனுவை தள்ளுபடி செய்ததுடன், தேர்வு நடத்த அனுமதி வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்-லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் 6 பாடங்களை ஒருங்கிணைத்து அவற்றை 2 பாடமாக பிரித்து 2 நாட்கள் தேர்வு நடத்தப்படும் என்றும், அந்த தேர்வுகள் வருகிற 19-ந் தேதி மற்றும் 22-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்தார்.

இந்த தேர்வு மாணவர்களின் திறனை மதிப்பிடும் தேர்வாக இருக்கும் என்றும், இது தேர்வு முடிவாக எடுத்துக் கொள்ளப்படாது என்றும் சுரேஷ்குமார் கூறினார்.

ரத்து செய்ய கோரிய மனு

கொரோனா நெருக்கடி காலத்தில் இந்த தேர்வை நடத்துவது சரியல்ல என்று ஒரு தரப்பினர் கூறினர். மற்றொரு தரப்பினர் இந்த தேர்வை நடத்துவது அவசியம் தான் என்று கூறினர். 

இந்த நிலையில் அரசு நடத்த திட்டமிட்டுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சிங்கிரிகவுடா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

மாணவர்களின் நலன் கருதி...

இந்த மனு ஐகோர்ட்டில் நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி ஆஜராகி வாதிடுகையில், "மாணவர்களின் நலன் கருதி 2 நாட்கள் மட்டுமே இந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. அவர்களின் திறனை அறிய இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 

2 நாட்களும் தலா ஒரு மணி நேரம் மட்டுமே தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வின்போது மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன. அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.

தள்ளுபடி

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், "சி.பி.எஸ்.இ.யை போல் இந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும். கொரோனா நெருக்கடி காலத்தில் மாணவர்களை தேர்வு எழுத வைப்பது சரியல்ல" என்றார். 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த அனுமதியும் வழங்கினர். 

தேர்வு நடத்துவது நல்லது

நீதிபதிகள் தங்களின் உத்தரவில், "கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு நேரமும் ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மணி நேர தேர்வு கூட எழுதாவிட்டால் எப்படி மதிப்பெண்களை வழங்க முடியும். 

தேர்வு எழுதுவதா? வேண்டாமா? என்பது குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் முடிவு செய்து கொள்ளட்டும்.
கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்றி தேர்வை நடத்த வேண்டும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். தேர்வை எழுத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. தேர்வை நடத்துவது நல்லது. ஆனால் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த தேர்வை நடத்த அரசு உருவாக்கியுள்ள வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளனர்.

மந்திரி வரவேற்பு

ஐகோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் புதிய முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இந்த புதிய முறை தேர்வு மற்றும் அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஐகோர்ட்டு பாராட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஐகோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது. இது எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டும் மாநில அரசு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்த திட்டமிட்டு இருந்ததை ஐகோர்ட்டு ஆதரித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

Next Story