நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பூசாரிகள் மனு


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பூசாரிகள் மனு
x
தினத்தந்தி 13 July 2021 2:24 AM IST (Updated: 13 July 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி பூசாரிகள் மனு கொடுத்தனர்.

நெல்லை;
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஏராளமான மக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்தனர். கொரோனா ஊரடங்கால் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை வாங்கவில்லை. மாறாக அலுவலக நுழைவு வாசலில் உள்ள மனு பெட்டியில் மனுக்களை போட்டுச்சென்றனர். பூசாரிகள் பேரமைப்பு நெல்லை மாவட்ட தலைவர் ஆறுமுகநம்பி தலைமையில் பூசாரிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள பெட்டியில் போட்ட மனுவில், ‘‘தமிழக பூசாரிகளின் நிலையை உணர்ந்து ஒரு கால பூஜை திட்டத்தில் பயன்பெறும் பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட கிராமம் மற்றும் நகர் பகுதியில் பூஜை செய்து வரும் பூசாரிகள் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பூசாரிகள் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்று கூறிஇருந்தனர்.

நாங்குநேரியை அடுத்த பருத்திபாடு அருகே உள்ள சுருளை கிராமத்தை சேர்ந்தவர்கள், “எங்களது ஊரில் சேதம் அடைந்த காமராஜர் சிலையை அகற்றிவிட்டு புதிய சிலை அமைத்தோம். அதை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று கூறிஇருந்தனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும் அந்த கிராம மக்களிடமும் பேசி உறுதி அளித்தார். இதேபோல் பல்வேறு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Next Story