பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்
பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் நகரப் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கான ஆணையை அரசு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கடந்த மே மாதத்தில் இருந்து சாதாரண கட்டண நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் 288 அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இத்தகைய பஸ்களின் முன்புறம் இதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இலவசமாக பயணிக்கும் பெண் பயணிகளை கணக்கீடு செய்யும் வகையில் கட்டணமில்லா டிக்கெட்டை அரசு போக்குவரத்து கழகம் அச்சிட்டுள்ளது. குமரி மாவட்ட அரசு பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் தமிழில் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டு சென்ற பஸ்களில் இந்த கட்டணமில்லா டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. இதே போல மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர், திருநங்கைகள் இலவசமாக பயணிக்கிறார்கள். அவர்களுக்கும் கட்டணமில்லா டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story