சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவில் மண்டகபடிதாரர்கள் 50 பேரை அனுமதிக்க முடிவு
சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவில் தினமும் மண்டகபடிதாரர்கள் 50 பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் இரவில் பல்வேறு சமுதாயத்தினரின் மண்டகபடியில் எழுந்தருளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆடித்தபசு விழாவில் கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. மண்டகபடிதாரர்கள் பூஜை பொருட்களை வழங்கினாலும், கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆடித்தபசு விழா நாட்களில் தினமும் மண்டகபடிதாரர்கள் 50 பேரை அனுமதிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார்.இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் ஹஸ்ரத் பேகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. தாசில்தார் ராம்குமார், கோவில் துணை ஆணையர் கணேசன் மற்றும் மண்டகபடிதாரர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆடித்தபசு விழா நாட்களில் தினமும் மண்டகபடிதாரர்கள் 50 பேரை கோவிலுக்குள் அனுமதிப்பது. அதற்கான அடையாள அட்டைகளை கோவில் நிர்வாகம் மூலம் வழங்குவது. விழாவின் சிகர நாளில் ஆடித்தபசு காட்சிக்கு ஏற்பாடு செய்யும் மண்டகபடிதாரர்களான இரு சமுதாயத்திலும் தலா 50 பேரை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அனைவரும் ஏற்றனர்.
Related Tags :
Next Story