ஊராட்சி தலைவரின் மகன்கள்- செவிலியர் உள்பட 8 பேர் கைது


ஊராட்சி தலைவரின் மகன்கள்- செவிலியர் உள்பட 8 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2021 4:12 AM IST (Updated: 13 July 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

கருக்கலைப்பு செய்த பெண் இறந்த வழக்கில் ஊராட்சி தலைவரின் மகன்கள்- செவிலியர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

வரதராஜன்பேட்டை:

பட்டதாரி பெண்
கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(வயது 27). பட்டதாரி. இவருடைய தந்தை சுப்பிரமணியன், தாய் கலைச்செல்வி ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இதனால் சுப்புலட்சுமி, கொத்தட்டை கிராமத்தில் உள்ள தாத்தா நடராஜன், பாட்டி பச்சம்மாள் ஆகியோரின் ஆதரவோடு ஒரே குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
சுப்புலட்சுமிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சியின் மகன் வசந்தகுமாருக்கும்(27) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சுப்புலட்சுமி கர்ப்பமானார். மேலும் கடந்த 3-ந் தேதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சுப்புலட்சுமி வெளியே சென்றுவிட்டார்.
சாவு
இந்நிலையில் சுப்புலட்சுமி கருக்கலைப்பு செய்வதற்காக, விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் அரியலூர் மாவட்டம் ராங்கியம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணவேணியின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து ஆண்டிமடம் அருகே அன்னங்காரகுப்பம் சூனாபுரி பகுதியில் உள்ள பொற்செல்வி என்பவர் வீட்டில் வைத்து சுப்புலட்சுமிக்கு, கிருஷ்ணவேணி கருக்கலைப்பு செய்துள்ளார். தகுந்த மருத்துவர் பரிந்துரையின்றி முறையாக கருக்கலைப்பு செய்யாததால் சுப்புலட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
இதையடுத்து சுப்புலட்சுமியை சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வசந்தகுமார் சேர்த்துள்ளார். அப்போது அவர், மருத்துவமனையில் சுப்புலட்சுமியின் பெயரை ராஜலட்சுமி என்றும், கணவர் பெயர் குமார் என்றும் தவறாக கொடுத்து விட்டு, சுப்புலட்சுமியை அரசு மருத்துவமனையிலேயே தனியாக விட்டு விட்டு தனது ஊரை சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சுப்புலட்சுமியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆண்டிமடம் போலீசார், மருத்துவமனையில் பதிவாகியிருந்த பெயர்களை வைத்து விசாரணை நடத்தியபோது குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறிய தகவலை வைத்து ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது பற்றி சுப்புலட்சுமியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்து நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர் இதுகுறித்து சுப்புலட்சுமியின் உறவினர் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார்.
8 பேர் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருக்கலைப்பு செய்வதாக கூறி இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான செவிலியர் கிருஷ்ணவேணி(41), கரு உண்டாக காரணமான வசந்தகுமார் மற்றும் கருக்கலைப்பு செய்ய வீட்டில் அனுமதி வழங்கிய கிருஷ்ணவேணியின் உறவினர் பொற்செல்வி (50), கருக்கலைப்பில் எடுக்கப்பட்ட 8 மாத ஆண் சிசுவை முந்திரி காட்டில் புதைக்க உடந்தையாக இருந்ததாக கிருஷ்ணவேணியின் தம்பி கர்ணன்(36), மேலும் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக வசந்தகுமாரின் அண்ணன் சஞ்சய் காந்தி (29), சந்தோஷ்குமார் (29), திருமூர்த்தி (27), கலாவதி (55) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுப்பிரமணியன் வழக்கை விசாரித்து, கைதான 8 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பெண்களும் திருச்சி மகளிர் சிறையிலும், மற்றவர்கள் 5 பேரும் ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
திருமணம் நடைபெற இருந்த நிலையில்...
இதற்கிடையே போலீசார் விசாரணையில், சுப்புலட்சுமிக்கு சில நாட்களில் அதே ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்யும் வாலிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருந்த சூழலில், அதனை மறைத்து கருக்கலைப்பு செய்ததாக, பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அரியலூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story