விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது


விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 July 2021 4:12 AM IST (Updated: 13 July 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தா.பழூர்:

கொலை
அரியலூர் மாவட்டம் தூத்தூர் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 46). விவசாயி. இவருடைய மனைவி சுலோச்சனா. இந்த தம்பதிக்கு கவியரசன், அரவிந்த் என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். காதல் விவகாரம் காரணமாக, கண்ணன் குடும்பத்திற்கும், அதே ஊரை சேர்ந்த நாகராஜின் மகன் அஜித்குமார்(19) குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கண்ணன்-சுலோச்சனா தம்பதி, தங்களுக்கு பாதுகாப்பு தரும்படி தூத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு, தொலைபேசியிலும் அடிக்கடி அழைத்து பாதுகாப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணன் அவரது உறவினர்களோடு வைப்பூரில் மீன் குட்டையில் மீன் வாங்க நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவரை, அஜித்குமாரின் அண்ணன் அருண்மோகன்(27) கத்தியால் குத்தியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதுதொடர்பாக தூத்தூர் போலீஸ் நிலையத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் தலைமறைவாக இருந்த அருண்மோகனை, தா.பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான சிறப்பு படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் தா.பழூரில் சுற்றித்திரிந்த அருண்மோகனை, சிறப்பு படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அருண்மோகன் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறுகையில், கண்ணனின் மகள் காதல் விவகாரத்தில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் கண்ணன் அடிக்கடி சீண்டி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே கண்ணனை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார்.
கத்தி பறிமுதல்
இதையடுத்து அருண்மோகனிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அருண்மோகன் ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Next Story