அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு ‘கட்டணமில்லா டிக்கெட்' வினியோகம்


அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு ‘கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்
x
தினத்தந்தி 13 July 2021 4:12 AM IST (Updated: 13 July 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு ‘கட்டணமில்லா டிக்கெட்' வினியோகம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்:

மகளிருக்கு இலவச பயணம்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் 5 முக்கிய அறிவிப்புகளில் அவர் கையெழுத்திட்டார். அதில் அரசு டவுன் பஸ்களில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்பதும் ஒன்றாகும். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பகுதி கிராமப்புறமாகும். இதனால் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் பெண் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பஸ்களில் பெரும்பாலான இருக்கைகளில் பெண்களே அமர்ந்திருப்பதை காணமுடிகிறது. இதேபோல அரசு டவுன் பஸ்களில் திருநங்கைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களோடு பயணம் செய்யும் உதவியாளர்களுக்கும் பயணம் செய்ய கட்டணம் கிடையாது. அவர்களுக்கு பிரத்யேக டிக்கெட் வழங்கப்படுகிறது.
கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்
இந்த நிலையில் டவுன் பஸ்களில் பெண் பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் எத்தனை பேர் பயணம் மேற்கொள்கின்றனர் என்பதை கணக்கிடும் வகையில் கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படும் என அறவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண் பயணிகளுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட டவுன் பஸ்களில் பெண் பயணிகளுக்கு ‘கட்டணமில்லா டிக்கெட்' வழங்கப்பட்டது.
அந்த டிக்கெட்டில் ‘மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு, மாற்றத்தக்கதல்ல, கேட்கும்போது காண்பிக்க அல்லது கொடுக்கப்பட வேண்டும். பரிசோதனைக்கு உட்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. பஸ்சில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு இந்த டிக்கெட்டுகளை கண்டக்டர்கள் வழங்குகின்றனர். ஒரு நாளைக்கு டவுன் பஸ்களில் எத்தனை பெண் பயணிகள் இலவசமாக பயணம் மேற்கொள்கின்றனர் என்பதை இதன் மூலம் கணக்கிட முடியும். இதற்கு முன்பு டிக்கெட் வழங்கப்படாமல் பயணம் செய்யும் பெண் பயணிகளின் எண்ணிக்கையை அந்தந்த பஸ்களில் கண்டக்டர்கள் குறிப்பெடுத்து எழுதி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story