பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 July 2021 4:13 AM IST (Updated: 13 July 2021 4:13 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்:

சேமிப்பு பணம் கையாடல்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சாந்தாதேவி குமார் தலைமையில் கோனேரிப்பாளையம் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களில் சிலர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில், கோனேரிப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மத்திய அரசின் தபால் அலுவலகத்தை நம்பி பல்வேறு சேமிப்பு திட்டங்களில் சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை எங்கள் ஊரில் உள்ள கிளை தபால் அலுவலக ஊழியர் ஒருவரிடம் தவணை முறையில் கட்டி வந்தனர். இந்நிலையில் அந்த நபர் சுமார் ரூ.50 லட்சத்தை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டார். அந்த பணத்தை உடனடியாக திரும்ப பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
நத்தம் மனைவரி பட்டா
இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா மறவநத்தம், பழைய மறவத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டர் அலுவலகத்தில் 2 மனுக்கள் கொடுத்தனர்.
அதில் மறவநத்தம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 130 குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அரசு இலவச வீட்டுமனை வழங்கியது. தற்போது அந்த இடத்தில் நாங்கள் குடியிருந்து வருகிறோம். ஆனால் நத்தம் மனைவரி பட்டா வழங்கவில்லை. எனவே கலெக்டர் எங்களுக்கு நத்தம் மனைவரி பட்டா உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
பழைய மறவநத்தம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதி குடியிருப்பில் வெளியேறும் கழிவுநீர் வாய்க்காலில் சென்று கொண்டிருந்தது. தற்போது மாற்று சமூகத்தினர் ஒருவர் அந்த வாய்க்காலில் மண் வெட்டிப்போட்டு ஆக்கிரமித்துள்ளார். இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊராட்சி மன்ற தலைவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கழிவுநீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வேப்பந்தட்டை தாலுகா அரசலூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில் ஈச்சங்காடு-கருப்பு கோவில் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் மீது புகார்
ஆலத்தூர் தாலுகா பாடாலூர் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு (அமைப்பு சாரா) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தால், வருமான சான்று, சாதி சான்று, இருப்பிட சான்று ஆகியவை கேட்டு விண்ணப்பித்தால் கையெழுத்திட மாட்டேன், எந்த சலுகையும் கிடைக்கவிடாமல் செய்து விடுவேன், குடும்ப அட்டையில் பெயரை நீக்கி விடுவேன் என்று கிராம நிர்வாக அலுவலர் மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Next Story