குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடைவிழா பக்தர்களுக்கு அனுமதி இல்லை


குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில்  ஆனி கொடைவிழா பக்தர்களுக்கு அனுமதி இல்லை
x
தினத்தந்தி 13 July 2021 5:04 PM IST (Updated: 13 July 2021 5:04 PM IST)
t-max-icont-min-icon

குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா நடந்தது. இதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை

தென்திருப்பேரை:
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா நேற்று நடந்தது. ஆனால், கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனி கொடைவிழா
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த விழா நாளில் காலையில் அம்மன் தங்கமுக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மதியமும், இரவிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து தரிசனம் செய்வது வழக்கம். கோவிலை ஒட்டியுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவர்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. கடந்த வாரம் கோவில்கள் திறக்கப்பட்டன.
ஆனால், கோவில்களில் கொடைவிழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் குரங்கணி முத்து மாலை அம்மன் கோவிலில் நேற்று ஆனி கொடைவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கோவில் முன்பு நின்று வழிபாடு
வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ஆழ்வார்திருநகரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கோவிலுக்கு வெளியே நின்ற பக்தர்களும், முடி காணிக்கை செலுத்திய பக்தர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் வலியுறுத்தினார்கள்.


Next Story