பொம்மிடி அருகே வயதான தம்பதி படுகொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பொம்மிடி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொம்மிடி,
பொம்மிடி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வயதான தம்பதி
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80). விவசாயி. இவருடைய மனைவி சுலோசனா (76). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு மணி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மணி சேலத்தில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மகள்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.
திருமணமாகி மகன், மகள்கள் வெளியூர்களில் வசித்து வருவதால் கணவன்-மனைவி 2 பேரும் தங்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வெளியே கயிறு கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அந்த நேரம், வீட்டின் பின்புறம் சத்தம் கேட்டதால் 2 பேரும் எழுந்து சென்று பார்த்தனர்.
படுகொலை
அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், கணவன்-மனைவியை திடீரென தாக்கியுள்ளனர். பின்னர் அந்த நபர்கள், கிருஷ்ணனை கழுத்தில் கூர்மையான ஆயுதம் கொண்டு குத்தி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்து இறந்தார். அவரை, காப்பாற்ற முயன்ற சுலோசனாவையும் அந்த நபர்கள் தலையில் தாக்கி உள்ளனர். இதில் அவரும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை தோட்ட வேலைக்காக வந்த தொழிலாளர்கள் கணவன்-மனைவி 2 பேரும் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள், மணி மற்றும் மகள்களுக்கும், பொம்மிடி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மகன் மணி மற்றும் குடும்பத்தினர் வந்து 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.
டி.ஐ.ஜி. விசாரணை
இந்த இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்ததும் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (பொறுப்பு) ராஜா சோமசுந்தரம், அண்ணாதுரை, பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்ட சுலோசனா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, கம்மல் திருட்டு போனது தெரியவந்தது. ஆனால் அவர் கையில் அணிந்து இருந்த தங்க முலாம் பூசப்பட்ட வளையல் அப்படியே இருந்தது. தொடர்ந்து கொலை குறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் தோட்ட வேலையாட்கள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
சொத்துக்காக கொலையா?
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வீட்டை சுற்றி வந்து விட்டு சிறிது தூரம் ஓடி அங்கேயே படுத்து கொண்டது. பின்னர் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள், தம்பதியை நகைக்காக படுகொலை செய்தார்களா? அல்லது சொத்து தகராறில் தம்பதி கொலை செய்யப்பட்டார்களா? என தனிப்படை அமைத்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story