குண்டடம் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபரை கொலை செய்து புதைத்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குண்டடம் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபரை கொலை செய்து புதைத்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குண்டடம்:
குண்டடம் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபரை கொலை செய்து புதைத்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆடு மேய்க்கும் தொழில்
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள காதப்புள்ளபட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். விவசாயியான இவர் தற்போது தாராபுரத்தில் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் தாராபுரத்தை அடுத்துள்ள சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 32) என்பவர் தனது மனைவி சித்ராவுடன் (23) கடந்த 8 வருடங்களாக வசித்து வருகிறார். ஆடு மேய்க்கும் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சித்ராவுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் வருவது வழக்கம். எனவே, பொள்ளாச்சி தொண்டாமுத்தூரில் வசிக்கும் தம்பி முறைகொண்ட 17 வயது சிறுவனை ரமேஷ் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். சித்ராவை கவனித்துக்கொள்வதற்காக தங்களுடன் அந்த சிறுவனை தங்க வைத்துக் கொண்டார்.
மேலும் தாராபுரம் சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த தனது உறவினரான மணிகண்டன் (20) என்ற வாலிபரையும் கடந்த 8 மாதங்களாக தங்களுடன் தங்க வைத்திருந்தார்.
கொன்று புதைத்தனர்
இந்த நிலையில் சித்ராவுடன் 17 வயது சிறுவன், மணிகண்டன் ஆகியோருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடிக்கடி இவர்கள் ரமேஷ் ஆடு மேய்க்கச் சென்ற நேரத்தில் சித்ராவுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரமேசுக்கு தெரியவந்ததால் மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றிய நிலையில் ரமேஷ், சித்ரா, 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை தடியால் தலையில் அடித்துக்கொன்றுள்ளனர். பின்னர் தாங்கள் தங்கியுள்ள வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டு வழக்கம்போல அவரவர் வேலையை பார்த்து வந்தனர்.
மிரட்டி பணம் பறிப்பு
இந்த நிலையில் சித்ராவுக்கு குண்டடத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விஷயம் ரமேசுக்கு தெரிந்ததால், ரமேஷ் இந்த கள்ளத்தொடர்பை பயன்படுத்தி அந்த வாலிபரை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அந்த வாலிபர் பணம் கொடுக்க மறுத்ததால், 6 மாதங்களுக்கு முன்பு மணிகண்டனை கொலை செய்து இங்கு புதைத்துவிட்டோம். நீ நாங்கள் சொல்கிறபடி நடக்கவில்லை என்றால் உன்னையும் கொலைசெய்து புதைத்துவிடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளார்.
போலீசில் புகார்
இதனால் பயந்து போன அந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்து உரிமையாளர் பாலசுப்பிரமணியத்திடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் குண்டடம் போலீசில் புகார் செய்தார்.
கொலை சம்பவம் நடந்தது உண்மைதானா? என்று அறிய ரமேஷ், அவரது மனைவி சித்ரா, 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டனை கொலை செய்து புதைத்ததை 3 பேரும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
3 பேர் கைது
அதனைத்தொடர்ந்து நேற்று தாராபுரம் தாசில்தார் சைலஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு தன்ராசு, குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் மணிகண்டன் பிணத்தை தோண்டி எடுத்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுதொடர்பாக ரமேஷ், அவரது மனைவி சித்ரா, ரமேசின் உறவினரான 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் குண்டடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story