பழனிக்கு வந்த கேரள பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை; போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி பரபரப்பு பேட்டி
பழனிக்கு கணவருடன் வந்த கேரள பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும், அவர்கள் 2 பேரும் தம்பதியே அல்ல என்றும் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி தெரிவித்தார்.
பழனி:
பழனிக்கு கணவருடன் வந்த கேரள பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும், அவர்கள் 2 பேரும் தம்பதியே அல்ல என்றும் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி தெரிவித்தார்.
கேரள பெண்
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் 19-ந் தேதி தனது கணவருடன் பழனிக்கு வந்தார். கோவிலில் சாமி கும்பிட வந்த அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். அதன்பின்னர் பழனியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அந்த பெண்ணின் கணவர் கண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் பழனிக்கு சென்றபோது அங்கு தனது மனைவியை சிலர் காரில் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார். அதன்பேரில் கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனது மனைவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பழனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கண்ணூர் போலீசாரிடம் அவர் கூறியிருந்தார். இந்த தகவல் ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
கூட்டு பலாத்காரம்
பழனிக்கு வந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழக-கேரள மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேபோல் இருமாநில போலீஸ் வட்டாரத்திலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கேரள பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரிக்கு ‘வாட்ஸ்-அப்’பில் புகார் வந்தது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு டி.ஐ.ஜி. அறிவுறுத்தினார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவின் பேரில் பழனி அனைத்து மகளிர் போலீசார் கேரள பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், பழனியில் தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அப்போது கேரள பெண், தனது கணவருடன் தங்கி இருந்ததாக கூறப்படும் தனியார் தங்கும் விடுதி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த தம்பதியினர் எங்கெல்லாம் சென்றார்கள், அவர்களை யாரெல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்தும் விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் தங்கும் விடுதி, பழனி அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும் இதுகுறித்து கேரள பெண்ணிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா நேற்று முன்தினம் பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
கேரளாவுக்கு விரைந்தனர்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கேரள பெண் பழனிக்கு வருகை தந்தபோது பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கடத்தல் மற்றும் கூட்டு கற்பழிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், கேரள பெண் பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கப்பட்டு, போலீசார் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் விசாரணை நடத்துவதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரள மாநிலம் கண்ணூருக்கு நேற்று காலை விரைந்தனர். அங்கு அவர்கள் கண்ணூர் போலீசாரிடமும், பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே பழனி டவுன் போலீஸ் நிலையத்திற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி நேற்று வந்தார். அப்போது கேரளாவுக்கு சென்று தனிப்படை போலீசார் நடத்திய விசாரணை குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தம்பதியே அல்ல
கடந்த மாதம் 19-ந்தேதி பழனிக்கு வந்த தம்பதி, தாங்கள் தங்கியிருந்த விடுதியில் மதுபோதையில் தகராறு செய்தனர். இதனால் அவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு 25-ந்தேதி வரை 2 பேரும் பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சர்வசாதாரணமாக உலா வந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மேலும் அந்த பெண்ணின் கணவர் என்று கூறப்படும் நபரின் சகோதரியிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் 2 பேருக்கும் திருமணமாகவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் தம்பதியே அல்ல என்ற உண்மை தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் பணம் பறிக்கும் நோக்கத்தில் கேரள போலீஸ் துறை பெயரை பயன்படுத்தி பழனி விடுதி உரிமையாளரை மிரட்டியுள்ளனர். குறிப்பிட்ட தங்கும் விடுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூட்டு பாலியல் நடக்கவில்லை
இந்தநிலையில் தான் பரபரப்பான இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக போலீஸ் துறை சார்பில் திண்டுக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கேரள மாநிலம் கண்ணூருக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவ அறிக்கை ஒன்று தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அதில், அந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை நடக்கவில்லை என்றும், அவரது உடலில் காயங்களோ, பிறப்பு உறுப்பில் பாதிப்போ ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர அந்த பெண்ணிடம் கேரள போலீசார் நடத்திய ரகசிய விசாரணை குறித்த ஆவணங்கள், மருத்துவ அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை வைத்து அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story