கிருஷ்ணகிரியில் சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்


கிருஷ்ணகிரியில் சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 July 2021 10:03 PM IST (Updated: 13 July 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி:
குடிநீர் பிரச்சினை 
கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட முனுசாமி தெரு, காவாமேடு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி மூலம் தென்பெண்ணை ஆற்று நீர் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக இங்கு வசிக்கும் மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும், கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல் 
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நேற்று காலை கிருஷ்ணகிரி-மகாராஜகடை சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் முருகேசன் மற்றும் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் பொதுமக்கள் கூறியதாவது:-
முறையற்ற குடிநீர் இணைப்பு
எங்கள் பகுதியில் குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை. இங்கு பலர் அனுமதி பெறாமல் முறையற்ற குடிநீர் இணைப்புகள் வைத்துள்ளனர். மேலும், மின்மோட்டர் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், பெரும்பாலான வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதுதொடர்பாக ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தடையின்றி குடிநீர் கிடைக்கவும், அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்களிடம் பேசிய நகராட்சி ஆணையாளர் முருகேசன், நான் பொறுப்பேற்று ஒரு நாள் தான் ஆகிறது. இந்த பகுதிகளில் சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story