கழிவுகளை சுத்தம் செய்ய ரோபோ பயன்படுத்த வேண்டும்


கழிவுகளை சுத்தம் செய்ய ரோபோ பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 13 July 2021 4:48 PM GMT (Updated: 13 July 2021 4:48 PM GMT)

பாதாள சாக்கடையில் கழிவுகளை சுத்தம் செய்ய ரோபோ பயன்படுத்த வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

தேனி: 

குறைகேட்பு கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலை வகித்தார். தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி, தூய்மை பணியாளர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு சம்பள வேறுபாடு, ஊதிய உயர்வு வழங்காமல் உள்ளது, 

பணிச்சுமை, குடியிருப்புகள், பதவி உயர்வு போன்ற பல்வேறு குறைகளை தெரிவித்தனர். குறைகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளித்தனர்.
கூட்டத்தில் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:-
தூய்மை பணியாளர்களின் பணிக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகளை தூய்மை பணியாளர்கள் பெறுவதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பயன்பெறத்தக்க வகையில், கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை பெற்று, கடனுதவிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ரோபோ பயன்பாடு
எந்தவொரு சூழ்நிலையிலும் தூய்மை பணியாளர்கள், மனித கழிவுகளை அகற்றுவதில் ஈடுபடக்கூடாது. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிகளில், சுத்தம் செய்யும் பணிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரோபோ எந்திரங்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

தூய்மை பணியாளர்களின் குறைகளை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகள் கேட்டறிந்து அவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும். குறைகளை கேட்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.

தூய்மை பணியாளர்களுக்கு பணி புரியும் இடங்களில் செக்ஸ் தொல்லை அல்லது அரசுத்துறை அலுவலர்களால் தொந்தரவுகள் ஏற்பட்டால் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம். தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். 

பா.ஜ.க. கோரிக்கை
கூட்டத்தில், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி அளித்த மனுவில், "கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். 

தமிழ்ப்புலிகள் கட்சியின் தென்மண்டல செயலாளர் ஆதிநாகராசு அளித்த மனுவில், "மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் தூய்மை பணி செய்து வருகின்றனர். இதே பணிக்கு சேர்ந்த பிற சமுதாயத்தினர் வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்த சாதிய பாகுபாடு களையப்பட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story