தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.3¾ லட்சம் நகை கொள்ளை


தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.3¾ லட்சம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 13 July 2021 10:46 PM IST (Updated: 13 July 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.3¾ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் தந்தை பெரியார் நகர் கங்கை சதுக்கம் பகுதியில் வசித்து வருபவர் இளவழகன் (வயது 39). இவர், விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த 9-ந் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊரான காஞ்சீபுரத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் விழுப்புரம் வந்தனர்.

நகை கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9¾ பவுன் நகைகள் மற்றும் 20 கிராம் எடையுள்ள பிளாட்டினம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து இளவழகன், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கடந்த 3 நாட்களாக வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் வைத்திருந்த மேற்கண்ட நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.3¾ லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story